யோகிராம் சுரத் குமார் !!
அவரது ஒரு கை தேய்ந்த தேங்காய்ச் சிரட்டையைப் பிச்சைக்காகப் பற்றியிருக்கும். கூடவே அதே கையில் பனையோலை விசிறி இருக்கும்.
மறு கையோ வரமளிக்க உயர்ந்த நிலையில் இருக்கும். ஒரு சுறுசுறுப்பான ஆன்ம வர்த்தகர்போல இருப்பார். பிச்சை இடு, வரம் பெற்றுக்கொள் என்பது போல. கூரிய உணர்திறம் கொண்டிருப்பார்.
போற்றுதலும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டு இவரிடம் வந்து மண்டியிட்டு இறைஞ்சுவோர், குடும்பங்கள், பிச்சைக்காரர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், சிறுவர்கள், வர்த்தகர்கள் எனப் பலரின் முன்னிலையில் கருணை மற்றும் கழிவிரக்கம் மிளிரும் தேவதூதனுக்கே உரிய ஒளிவீசிடும் தோற்றத்துடன் தென்படுவார்.
இந்தச் செய்திகளை இப்படி அச்சில் அவருக்குக் காண்பியுங்களேன். இந்தப் பிச்சைக்காரனுக்கு இவ்வளவு பெரிய விளம்பரமா என்று நிச்சயமாக மகிழ்வார்.
ஒளிரும் இருகண்களும் ஒன்றுசேரச் சுருங்கி அந்த அடர்ந்த வெண்தாடிக்குள் மறைந்திருக்கும் வாயை மூடிக்கொண்டு பீறிட்டெழும் சிரிப்பை கையினால் மறைக்க முயல்வார்.
ஆனால் அவரது ஆனந்தம் அங்கிருக்கும் அனைவருக்கும் உடனே தொற்றிக்கொள்ளும். அனைவரையும் வாரிச்சுருட்டிக்கொண்டுபோய் பேரானந்தத்தில் அமிழ்த்தும்.
அவரது சிரிப்பு அடர்வுமிகுந்த கள் போன்றது. ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும் அது உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்து.
இசைஞானி இளையராஜா