இளைய ராஜா ராஜ பாட்டை ...
Music Composer, Instrumentalist, Recording Engineer, போன்ற பல்வேறு வார்த்தைகளுக்குரிய அர்த்தமும், ஒரு பாடல் உருவாக்கத்தில் அவரவர்களுக்குரிய பங்கு என்னவென்பது ஓரளவுக்குப் புரியத் தொடங்கிவிட்டிருந்த வயதில் Conductor என்கிற ஒரு வார்த்தை புதிதாய் கேட்கக் கிடைத்தது.
அதுவரை Conductor என்ற வார்த்தைக்கு அர்த்தம் வடிவேலு கூறியதைப்போல ‘நல்லா இருக்கிற டிக்கெட்ட பூராம் கிழிச்சுக் கொடுப்பாய்ங்களே? அந்த வேலதானே?” என்கிற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருந்த வயதில், Church choir’களில் பாடுபவர்களின் முன்னால் நின்று கைகளை மேலும் கீழுமாக தாளத்திற்கேற்ப அசைப்பவர்களைக் குறித்து, ‘நல்ல Conductor அவர்..’, ‘அருமையாக conduct செய்தார்’ என்பன போன்ற விஷயங்கள் காதில் விழத்தொடங்கிவிட்டிருந்தன. பின்னர் Church Choir’ல் சேர்ந்தபிறகே தாளத்திற்கேற்ப அவர் கைகளை அசைக்கவில்லை, அவர் கை அசைவிற்கேற்பவே பாடல் பாடப்படுகிறது என்பது புரியவந்தது.
ஆனால்.. Conductor என்பவர் முன்னால் நின்று கைகளை அசைத்தபடி என்னதான் சொல்ல வருகிறார்? அவர் முன்னால் நிற்காவிட்டாலும் இந்தக் குழுவால் அதே பாடலை அப்படியே பாடியிருக்க முடியும்தானே? அப்படியானால் அவர் வேலைதான் என்ன? என்ற கேள்விகளுடன் இருக்கையில், ஆலயத்தில் பாடல்கள் தொடர்ந்து பாடவும், ஒரு பாடலில் Conductor என்பவரின் பங்கு என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத் துவங்கியது.
Conducting குறித்ததான என் தட்டையான முதலாவது புரிதல் Conductor என்பவர் தன் கையசைவின் மூலம் Tempo.. பாடலின் வேகத்தை நிர்ணயித்து நடத்த மட்டும் செய்கிறார் என்பது. பின்னர் 4 Part Harmony என்ன என்பதைப் படித்து பாடத் துவங்கியபின்னர், Harmonyயின் ஒவ்வொரு பகுதியும் .. அவை பாடப்படும் தனித்தனி ஒலியளவையும் (Volume Levels) Conductor தனது விரல்களின் நுனியில் வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது.
பாடல் பாடப்படும் / இசை வாசிக்கப்படும் ஒலியளவை ‘Piano’, ‘mezzo-piano’, ‘forte’ ‘fortissimo’ என்று இசை மொழியில் குறிப்பிடுகின்றனர். இவற்றை ‘Dynamics’ என்கின்றனர். இந்த Dynamics ஒரு பாடலில் ஒழுங்கற்று இருக்கும்போது பாடலின் துவக்கத்திலிருந்து முடிவுவரை எவ்வித உணர்ச்சிகளுமின்றி உயிரற்று ஒலிக்கிறது. மாறாக, Dynamics பாடலின் உணர்வை உணர்த்தும்வண்ணம் சரியானபடி அமைந்துவிட்டால் அப்பாடல் உள்ளத்தைத் தொடுகிறது. இந்த Dynamics .. Conductor’ன் முன்னிருக்கும் Sheet Music’ல் f, ff, mf, p, pp, ppp, என்று தன்மைவாரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை Conductor பாடுபவர்க்கு / இசைப்பவர்க்கு தன் உடல்மொழியின் மூலம் உணர்த்துகிறார்.
’Conductor என்பவர் கைகளை அசைத்து இசையைக் கடத்துகிறார்’ என்பதன் மூலம் கைகளை அவர் எப்படி வேண்டுமானாலும் அசைக்கலாம் என்பதல்ல பொருள். அதற்கென்றும் இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாடலின் Time Signature (தாளக்கட்டு) 3/4, 4/4, 6/8 என்று அமைவதற்கேற்ப Conduct செய்பவர் கைகள் செல்லவேண்டிய திசை, வேகம், லாவகம் ஆகியவை வேறுபடுகின்றன. ஒரு பாடலின் துவக்கத்தில், இடையில், இறுதியில், Dotted Notes என்றழைக்கப்படும் நிறுத்தக் குறியீடுகளில், Dynamic Variation’களில் கையசைவு எப்படி இருக்கவேண்டும் என்பவை ‘Conducting Manual’ என்ற புத்தகத்தில் வாசிக்கக் கிடைத்தது. Conductor என்பவருக்கு இத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டுமா.. இத்தனை விஷயங்களை முன்னால் நின்று செய்கின்றாரா என்பதை வாசிக்க வாசிக்க பிரமிப்பூட்டியது.
ஆகிலும், இந்த இலக்கணங்களை Conductor’கள் அப்படியே பின்பற்றியாகவேண்டிய அவசியம் இருப்பதில்லை. பின்பற்றுவதுமில்லை. அது வாசிப்பவர்களுக்கும் Conductor’க்கும் இடையேயான உடல்மொழி.. புரிதல்.. Chemistry.. அவ்வளவே! வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே முன்னால் சாலையில் கவனம் இருக்கும் அதே நேரம், Rear view Mirror’லும், பக்கவாட்டுக் கண்ணாடிகளிலும் கவனம் இருப்பதைப் போல வாசிப்பவர்களின் கவனம் தம் முன் இருக்கும் இசைக்குறிப்புகளை கவனித்து வாசிப்பதினூடே Conductor’ஐ கவனித்து இசைப்பது இயல்பாய் நிகழ்கிறது.
Zubin Mehta போன்ற பிரபல Conductorகளின் கைகள் மட்டுமல்லாமல். முகபாவனைகளும் Conducting’க்கு பெயர் பெற்றவை. Tchaikovskyயின் Swan Lake Waltz’ஐ Zubin Mehta Conduct செய்யும் காணொளியில் இதைக் காணலாம். https://youtu.be/uQJdirZabac இதில் Zubin Mehta தன் கைகளில் ஒரு சிறிய குச்சி ஒன்றை வைத்து Conduct செய்கிறார். இதை ஆங்கிலத்தில் ‘Baton’ என்கிறார்கள். பெரும்பாலும் Western Classical Orchestra’வில் Conductor’கள் Baton’ஐப் பயன்படுத்துகின்றனர்.
இந்த Baton’ன் சிறிய அசைவுகூட, பாடல் இசைக்கப்படுவதில் எத்துணை முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை Rowan Atkinson தனது Mr. Bean Episode ஒன்றில் நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். https://youtu.be/vvR66bZBCIk
இசைஞானி தனது ’16 வயதினிலே’ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பின்போது தாம் Conductorஆக இருந்த நிகழ்வை தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
'16 வயதினிலே' படத்தில், மயிலின் (ஸ்ரீதேவி) கன்னத்தில் சப்பாணி (கமல்ஹாசன்) அறையும் காட்சி முடிந்ததும், 'செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா' என்ற பாடல் காட்சி வரும். பாடலுக்கு முன்னால் வரும் அந்த சீனுக்கு, மியூசிக் Composing நடந்தது. குறிப்பிட்ட `ஷாட்'டுகளுக்காக போடப்பட்ட இசை, அந்த ஷாட்டுகளில் அமையவில்லை. அது கொஞ்சம் முன்னால் போய்விடும். அல்லது அந்த ஷாட் முடிந்து லேட்டாகி விடும். இதை `Conduct செய்து கொண்டிருந்த கோவர்த்தன் சாரிடம், 'அண்ணே! நீங்க உள்ளே வாங்க, நானே Conduct செய்கிறேன்' என்று உள்ளே போனேன். ஒரு ரிகர்சல் Conduct செய்தேன். எல்லாம் அதனதன் இடத்தில் உட்கார்ந்தது. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு குஷி” என்று குறிப்பிட்டுள்ளார்.
கணிணி, மென்பொருட்கள், லூப்களின் துணையற்ற அந்த ஆசீர்வதிக்கப்பட்ட இசையமைப்புக் காலங்களில், Conducting இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி இசை ஜீவனுள்ளதாய் நம் உயிர்களை வருடியிருக்கின்றது.
Conductors தமது பணியைச் இத்தனை கவனத்துடன் செய்யவேண்டியிருக்கும்போது அவர்கள் கொஞ்சம் கவனம் தவறினால் என்ன நிகழும் என்பதைக் குறித்தும் இதே தொடரில் இசைஞானி கூறியிருந்தார்.
`மாதா உன் கோவிலில்' பாடலை ஒத்திகை பார்த்து `டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன். இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், Conduct செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார். எனக்கு கோபம். 'என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மியூசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?' என்று கேட்டேன். அவரோ, 'பாட்டில் மெய் மறந்துட்டேன்யா' என்றார், கூலாக. எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் Conduct செய்பவரைத் திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது” என்று குறிப்பிடுகிறார்.
இசைஞானியின் கச்சேரிகளில் முதலில் Conductor’ஆக இருந்த திரு.புருஷோத்தமனுக்குப் பின்னர் தற்சமயம் திரு.வயலின் பிரபாகர் Conductor பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறார். Budapest Strings Section இருந்தால் அவர்களுக்கென்று தனியாக இசைஞானியின் அபிமான Conductor Laszlo Kovacs அதைச் செய்கிறார். ஒவ்வொரு கச்சேரியிலும் லாஸ்லோவை இசைஞானி தனியாக அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர் Conduct செய்யும் சிறப்புகளை விவரிப்பது, Conductor’ன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
Conductor’ன் வேலை தோள்களில் 30 கிலோ எடையைச் சுமந்தவாறு பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மேலே நடந்து செல்வதைப் போன்று ஆபத்தானதும் கூட. Conductor’ன் கையசைவு ஒரு Split Second தவறினாலும், அந்த Dragging இசைப்பவர்களிடையே கடத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கெடுத்து இசை தொய்வடையும் அபாயம் உள்ளது. கச்சேரிகளில் இசைஞானி ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே ’ஜனனி ஜனனி’ பாடிக்கொண்டிருந்தாலும் திடீரென்று கைகளை உயர்த்தி சொடுக்குப் போட்டவாறு ஆர்கெஸ்ட்ராவை விரட்டுவதைக் கண்டிருப்போம். அதன் காரணம் நம் காதுகளுக்கு எட்டாத இந்த சிறிய தொய்வு அவர் செவிகளுக்குப் புலப்படுவதுதான். கீபோர்ட் அல்லது ரிதம் கம்போஸர்களிலிருந்து தாளம் ஒலிக்காத, 100-150 இசைக்கலைஞர்கள் ஒன்றாய் அமர்ந்து இசைக்கும் 100% Manual Orchestraவில் ஒரு பாடல் துவங்கும் வேகத்தில் பிடித்து, தொய்வில்லாமல் இறுதிவரை அதே வேகத்தில் கொண்டு முடிப்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. நொடிமுள்ளைப் போன்ற ஒரு சீரான வேகத்தில், தாளத்தில், உடலில் Metronome ஒன்று ஓடிக்கொண்டேயிருந்தாலொழிய இது சாத்தியமில்லை.
ஜூன் 2019ல் சென்னையில் நடைபெற்ற ’இளையராஜா 75’ நிகழ்ச்சியில் Strings Section’ஐ Conduct செய்த லாஸ்லோ கோவாக்ஸ் ‘நான் பொறந்து வந்தது ராஜவம்சத்துல’ Cappellaவை Conduct செய்தார். அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நடைபெற்ற கச்சேரியில் ‘நான் பொறந்து வந்தது’ பாடலை இசைஞானி Conduct செய்தார். பாடலை Conduct செய்பவருக்கும் பாடுபவருக்கும் இடையே இருக்கவேண்டிய புரிதல், Conductor’ன் கையசைவு, Eye-Contact’ன் நுணுக்கங்கள், Conduct செய்பவரின் உடல்மொழியைப் புரிந்து அவற்றைப் பின்பற்றிப் பாடும் நேர்த்தி, அத்தனையும் காணக் கிடைத்தது. Conduct செய்பவருக்கென்று வகுக்கப்பட்டிருக்கும் ஏட்டின் இலக்கணங்களை உடைத்து, பாடகர்களையும் பாடலையும் ஒருங்கே கரம்பற்றி நடத்தியது பெரும் பிரமிப்பு. https://youtu.be/rHV0UO4zvxY
‘நான் நௌஷாத், பர்மன் என்று பெரிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளேன். இந்தியாவில் எந்த இசையமைப்பாளரும் தானே இசையெழுதி, தானே Arrange செய்து, Conduct செய்வதில்லை. Ilaiyaraaja is the only Musician who can write, read, sing, play Music. அதனால்தான் அவரைக் Complete Music Director’ என்கிறேன்” என்று இசையமைப்பாளர் ‘Uttam Singh’ குறிப்பிட்டது எத்தனை உண்மை
இசைஞானியின் கம்போஸிங் ஆற்றல், அவர் பாடல்களின் மகிமை, அவர் குரல்வளம், என்று எத்தனையோ விஷயங்கள் போற்றப்பட்டாலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த, இசையை அவர் Conduct செய்யும் திறன் அதிகமாக சிலாகிக்கப்படுவதில்லை. காரணம் அவர் Conduct செய்யும் காட்சிகளை உடன் வாசித்த இசைக்கலைஞர்கள் தவிர்த்து பெரும்பாலும் ரசிகர்கள் பார்த்து மகிழ வாய்ப்புக் கிட்டியதில்லை. இனி வரும் கச்சேரிகளில் அவர் Conduct செய்யும்போது பாடகர்களையும் அவரையும் சேர்த்து கவனியுங்கள். உத்தம் சிங் சொன்னது எத்தனை உத்தமம் என்பது தெரியும்.
#ராஜாடா 💪🏼💪🏼
Ilaiyaraaja
Maestro Ilaiyaraaja
Mercuri
Thank to Andrew RS Anna