அவள் அப்படித்தான்.

அவள்அப்படிதான் திரைப்படத்தில் கல்லூரிப்பெண்கள் கூட்டத்தினிடையே சில கேள்விகளைக் கேட்பார் அருண்(கமல்). "pre marital செக்ஸ் பற்றி என்ன நினைக்கறிங்க? லீகலைஸ்டு அபார்சன் பற்றி என்ன நினைக்கறிங்க?" கூட்டத்தில் ஒரு பெண் லீகலைஸ்டு அபார்சனை ஆதரிக்கிறேன் என்பாள். "எனில் நீங்க pre marital செக்ஸ ஆதரிக்கலையா?" - அது நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது. (பொருளாதார நிலையில், கல்விநிலையில், வாழ்விடத்தில் என பொருத்திக் கொள்ளலாம்) ஆனாலும் இந்தியாவில் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 

அடுத்ததாக பாமரப் பெண்களிடம் கேள்விகள் கேட்பார். "இப்ப உள்ள பெண்கள் எல்லாம் படித்து முடித்து வேலைக்குப் போகிறார்களே அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?" - நல்ல விஷயம்தானே எல்லாரும் படிச்சு வேலைக்கு போகணும் என்று ஒருசாராரும். ஆமா நல்லா படிச்சி மினுக்கிக்கிட்டு குட்டி குட்டியா ட்ரஸ் போட்டுக்கிட்டு ஆட்டிக்கிட்டு திரியறாளுக என்று இன்னொரு சாரர் பெண்களும் இது சீரழிவென "ஆதங்கமாகச் சொல்லிக் கொண்டிருப்பர்.
உங்க கணவன்மாரெல்லாம் மது அருந்துகிறார்கள், இரண்டாவது கல்யாணம் செய்கிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு பெண்ணை சின்னவீடாக வைத்துக் கொள்கிறார்கள், இது மாதிரி ஆசை உங்களுக்கு வருமா?" - ஆமா எங்களுக்கு இந்த ஆசையெல்லாம் உண்டு, ஆனா என்ன பண்றது எல்லாத்தையும் அடக்கி வச்சிக்கிட்டு தலையெழுத்தேன்னு வாழுவோம்.

அப்படியாக குடும்பக் கட்டுப்பாடு, இஸ்லாமிய பர்தா எல்லாம் தொட்டு உரையாடல் நீளும், இந்தக் காட்சியில் பங்குபெற்ற எவருமே தொழில்முறை நடிகர்கள் இல்லை. எல்லாருமே நிஜ மாந்தர்கள். நாற்பத்தியேழு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகளை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது. 

நாற்பத்தியேழு வருடங்களுக்கு முன்னான ரஜினியின் தியாகு கதாபாத்திர வார்ப்பில்தான் இன்றைக்கு பெரும்பான்மை இளைஞர்கள் இருக்கிறார்கள். 
எப்படி மாமன்னன் படத்தில் பகத்ஃபாசிலின் ஆதிக்கத்தைப் போற்றி அவரை ஆதர்சமாக மாற்றிவிட்டார்களோ. அதே போல 'அவள் அப்படிதான்' படத்தை இன்றைக்கு இவர்கள் பார்த்தால் தியாகுவை நாயகனாக்கி விடுவர். 

ஏனெனில் படத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை இதுதான் என் குணம் என்று மாறாமல் இருக்கும் கதாபாத்திரம் தியாகுவுடையதுதான்(ரஜினி). 
பெண்கள் என்றால் அடிமைகள், நம் தேவைக்கானவள்,
காமவெறி, சொந்தக்கால்ல நிக்கிற வெறி இரண்டும் இருக்கும் பெண் அவளும் வாழமாட்டாள் நம்மையும் வாழவிடமாட்டாள். 
ஆணும் பெண்ணும் என்றைக்கும் ஒன்றாக முடியாது. இருவரும் சமமில்லை.
என்றவாறு இறுதி வரை பெண்கள் குறித்த கீழான எண்ணங்களை மட்டுமே அவன் வைத்திருப்பான். 

தியாகுவுக்கு அப்படியே எதிர்மாறான கதாபாத்திரமாக வருகின்ற அருண். இறுதியில் தியாகு வைத்திருக்கும் நல்லபெண் என்ற பிம்பத்திற்கு பொருந்தி வரக்கூடிய ஒரு அடிமைப் பெண்ணை திருமணம் செய்துகொள்வான். 

நிஜமாக இத்திரைப்படத்தில் அருணும் நாயகன் இல்லை தியாகுவும் நாயகன் இல்லை, இது முழுக்க முழுக்க மஞ்சுவின் கதை. நாயகியை முன்னிலைப் படுத்திய கதை. 

பெண்களுக்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் அருண்(கமல்) போன்ற ஒரு முற்போக்கு மனிதனால் கூட மஞ்சுவின் சுதந்திரத்தை சகித்துக் கொள்ள முடியாது. அவளைப் புரிந்து கொள்ளமுடியாது. மஞ்சு எப்போதெல்லாம் காதல் வயப்படுகிறாளோ அப்போதெல்லாம் சராசரிப் பெண்ணாக நடந்துகொள்கிறாள். மற்ற நேரங்களில் அவளை எதிர்கொள்ள ஆண்களால் முடிவதில்லை. அவளுடைய அகராதியில் தியாகுவுக்கும் அருணுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

அருணின் மனைவியிடம் மஞ்சு கேட்பாள் "பெண் சுதந்திரம் பற்றி நீங்க என்ன நினைக்கறிங்க?" 

"ஐயோ அதுவெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுங்க"

பாதுகாப்பான பதில், அதனால்தான் நீங்க நிம்மதியா இருக்கீங்க!

- யாத்திரி

Popular posts from this blog

humanity is humiliated

பரமஹம்ஸயோகனந்தர்

Mutual Funds